கரோனா பேரிடர் சூழலில் விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கோடு சட்ட மசோதா ஒன்றைக் கொண்டுவருவதுடன் மூன்று அவசரச் சட்டங்களையும், மத்திய பாஜக அரசு பிறப்பித்துள்ளது. விவசாயிகளின் இந்த விரோத நடவடிக்கையைக் கண்டித்து, வரும் ஜூலை 27ஆம் தேதி கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்துவது என, அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானித்துள்ளது.
இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் விவசாய அணியும் பங்கேற்கும் என, அக்கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்," பாஜக அரசு பிறப்பித்துள்ள அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்தச் சட்டத்தில் இதுவரை அத்தியாவசிய பண்டங்களின் பட்டியலில் இருந்த அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், தானியங்கள், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது.
இதனால் இந்தப் பொருட்களின் விலை அதிகரிக்கும். இதன் மீதான வரிவிதிப்பும் கூடும். இதனால் ஏழை எளிய மக்கள் தமது உணவுப் பாதுகாப்பை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த அவசர சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.'
வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு மேம்பாடு, உறுதி செய்து கொடுத்தல் அவசரச் சட்டம் ' என ஒன்றை பாஜக அரசு பிறப்பித்துள்ளது. இது ‘ஒரே நாடு ஒரே சந்தை’ என்ற அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
பாஜக அரசு கொண்டு வந்துள்ள இன்னொரு அவசர சட்டமான ‘விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம்’ என்பதும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான ஒன்றாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாவற்றுக்கும் உச்சமாக பாஜக அரசு கொண்டுவர முற்பட்டிருக்கும் ' மின்சாரத் திருத்தச் சட்ட மசோதா ' அமைந்துள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் தற்போது விவசாயிகள் அனுபவித்து வரும் இலவச மின்சார வசதி பறிக்கப்படும்; ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்கட்டண சலுகைகளும் ரத்து செய்யப்படும். .
எனவே,இந்த கொடுங்கோன்மை சட்டங்களை எதிர்த்து நடைபெறும் இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விவசாய அணியினர் மட்டுமின்றி, கட்சியின் அனைத்துத் தோழர்களும் முழுமூச்சாகப் பங்கேற்க வேண்டும்.
அன்றைய தினம் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். போராட்டக்குழுவினர் திட்டமிட்டுள்ளவாறு, ' ஒரு கோடி கையொப்பங்களைப் ' பெற்றுத் தருவதில் அனைவரும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.