தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புபவர்களால் நாகையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 179 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கரோனா தொற்று சமூகப் பரவலைத் தடுக்கும் வகையில் இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தின் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 18) நடைபெற்றது. இதில், நாகையில் நாளை(ஜூன் 19) முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என்றும், கரோனா தொற்று தாக்கம் குறையும் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் முழு கடையடைப்பு நடைபெறும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேசமயம், ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட 16 சங்கங்கள் மாலை ஆறு மணிக்குள் கடைகளை அடைத்து ஒத்துழைப்பு தருவதாக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகிக்கும் கடைகள் மட்டுமே இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.