கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில்," நான் ஆரல்வாய்மொழி பகுதியில் எனது கணவர், மகளுடன் வசித்து வந்தேன். நாங்கள் கிழங்கு வியாபாரம் செய்து வருகிறோம்.
எனது 15 வயதுடைய மகள் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 3ஆம் தேதி மாலை 5 மணியளவில் எனது மகள் விஷம் குடித்து வாந்தி எடுத்தார். அவளிடம் சென்று விசாரித்த போது, இரண்டு பேர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக என்னிடம் தெரிவித்தார்.
இதைக் கேட்டு பயந்து போன நான், இதுகுறித்து எனது கணவரிடம் தெரிவிக்காமல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தேன். அங்கு சிகிச்சை பலனின்றி எனது மகள் இறந்துவிட்டார். இந்த வழக்கில் காவல்துறையினர், எனது மகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால், எங்கள் ஊரில் வசிக்கும் சகோதரர்கள் இரண்டு பேர் சேர்ந்து, எனது மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதன் காரணமாகவே, எனது மகள் தற்கொலை செய்து உள்ளார். எனவே எனது மகளின் தற்கொலைக்கு காரணமாக இருந்த இரு நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் சிறுமியின் தாய் குறிப்பிட்டுள்ளார்.