சென்னை மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர், தான் ஹைதராபாத்தில் வசித்து வருவதாகவும், தனது 80 வயதான தாய் வசந்தா சுப்ரமணியம் சென்னை, தி.நகர், நீலகண்ட மேத்தா தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருவதாகவும், தற்போது கரோனா காரணமாக அவரை அழைத்து வர இயலவில்லை, எனவே தனது தாய்க்கு இ-பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகள் எடுத்துள்ளதால், சென்னை விமான நிலையம் வரை அழைத்துச் செல்ல உதவி தேவை என கூறியிருந்தார்.
உடனே, மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர், காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை பெண் காவலர் மகாலஷ்மி என்பவரிடம் விவரத்தை கூறி அந்த மூதாட்டிக்கு உதவுமாறு கூறினார். இதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்ற காவலர் மகாலஷ்மி, மூதாட்டி வசந்தா சுப்ரமணியத்தை நேரில் சந்தித்து விவரங்களை கூறி தங்களது மகளை பார்க்க ஹைதராபாத்திற்கு ஜூலை 1ஆம் தேதி செல்ல இருப்பதாக கூறினார். அதன்பேரில், ஜூலை 1 அன்று பெண் காவலர் மகாலஷ்மி, வசந்தாவின் வீட்டிற்கு சென்று அவரது உடைமைகள் மற்றும் பொருள்களை எடுத்துக் கொண்டு தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்த தனியார் கார் மூலம் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று, விமானத்தில் அனுப்பி வைத்தார்.
ஹைதராபாத்தில் உள்ள மகளின் வீட்டிற்கு நல்லபடியாக வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் மூதாட்டியும் அவரது மகளும் பெண் காவலர் மகாலஷ்மிக்கு நன்றிகளை தெரிவித்தனர். மேலும், பெண் காவலரின் மகத்தான உதவியை பாராட்டி மூதாட்டியின் மகள் முகநூல் சமூக வலைதளத்தில், தாங்கள் தமிழ்நாடு காவல் துறைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம், தன்னுடைய தொலைபேசி அழைப்பின் மூலம் எனது 80 வயதான தாய்க்கு, தனது சொந்த செலவில் கார் ஏற்பாடு செய்து விமான நிலையத்திற்கு அழைத்து வந்து உதவிய மாம்பலம் காவல் நிலைய முதல் நிலை காவலர் மகாலஷ்மிக்கு நன்றி.
மேலும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காவல்துறை, சென்னை பெருநகர காவல், மாம்பலம் காவல் நிலைய காவல்துறையினருக்கும் மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார். தக்க சமயத்தில் மூதாட்டியை அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றிவிட்ட மாம்பலம் காவல் நிலைய முதல்நிலைபெண் காவலர் மகாலஷ்மி என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.