இலங்கையைச் சேர்ந்தவர் முகமது ரிபாஸ்(வயது35). இவர் கடந்த 200 ஆம் ஆண்டில் சுற்றுலா விசா மூலம் ராமநாதபுரம் கீழக்கரை பகுதிக்கு வந்து தங்கி 2011ஆம் ஆண்டு கீழக்கரையைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு சட்டவிரோதமாக வாழ்ந்து வந்துள்ளார்.
2014ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு பின் விடுதலையானார்.
2018ஆம் ஆண்டு வாட்ஸ் அப்பில் 'வீரமரணம் எங்கள் இலக்கு' என்ற குழுவை தொடங்கியுள்ளார். இதன் மூலம் சமூகத்திற்கு எதிரான கருத்துக்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட முயற்சிசெய்ய திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
பின் பிணைப் பெற்று கீழக்கரை வட்டாட்சியரிடம் பொது சமூகத்திற்கு குந்தகம் விளைவிக்கும்படியான எந்த செயலிலும் ஈடுபடமாட்டேன் என்று உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.
இதையடுத்து, தான் இலங்கையைச் சேர்ந்தவன் என்பதை மறைத்து இந்திய குடியுரிமைப் பெற முயற்சி செய்துள்ளார்.
இந்தத் தகவல் கீழக்கரை வட்டாட்சியருக்கு தெரிந்தை தொடர்ந்து முகமது ரிபாஸின் பிணை ரத்து செய்யப்பட்டு, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் மீதம் இருந்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை தொடர புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, களியக்காவிளை சிறப்பு ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்படுகின்றனர்.
அந்த குற்றவாளிகளுடன் முகமது ரிபாஸ் பணப் புழக்கத்தில் இருந்தது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதற்காக சென்னை புழல் சிறையிலிருந்து முகமது ரிபாஸ் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, காவல் துறையின் விசாரணை மனுவை படிக்க முகமது ரிபாஸ் கால அவகாசம் கேட்டார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இது குறித்த தெரிந்து கொள்ள அவகாசம் கொடுத்து வழக்கை 29ஆம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளார்.