சிங்கப்பூரில் சிக்கித்தவித்த இந்தியா்கள் 145 பேரை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் சிங்கப்பூா் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு கொல்கத்தா வழியாக சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு வந்தது.
சென்னை விமான நிலையத்தில் அவா்களை வரவேற்க அரசு அலுவலர்கள், மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவக் குழுவினர், குடியுரிமை, சுங்கத் துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
விமானம் வந்து நின்றதும் பயணிகள் இறங்கி விமான நிலையத்திற்குள் வருவதற்கான ஏரோபிரிட்ஜ் விமானத்துடன் இணைக்கப்பட்டு, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன.
விமானத்திலிருந்து ஒரே ஒரு பயணி மட்டுமே இறங்கிவந்தார். அவா் சென்னையைச் சோ்ந்த சுமாா் 40 வயதுடைய ஆண் பயணி. அவரிடம் அலுவலர்கள் கேட்டபோது, "சிங்கப்பூரிலிருந்து இந்த விமானத்தில் 145 பேர் வந்தோம். ஆனால் கொல்கத்தா விமான நிலையத்தில் 144 போ் இறங்கிவிட்டனர். எனவே நான் மட்டும்தான் சென்னை வந்தேன்" என்று கூறினார்.
இதையடுத்து, அந்த ஒரு பயணியை வரவேற்று அழைத்துச் சென்று குடியுரிமை சுங்கச் சோதனை நடத்தினர். அதன்பின்பு மருத்துவப் பரிசோதனை நடந்தது. இதையடுத்து அவரை 14 நாள்கள் தனிமைப்படுத்த மேலக்கோட்டையூா் விஐடி கல்வி நிறுவனத்திற்கு அனுப்பினர்.
இது பற்றி அலுவலர்கள் கூறும்போது, "இந்த விமானத்தில் வந்த பயணிகளில் 130 பேர் கொல்கத்தாவில் இறங்கிவிட்டு 15 பேர் சென்னை வருவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. ஆனால் 144 போ் அங்கு இறங்கிவிட்டு ஒருவர் மட்டுமே வருவது இப்போதுதான் தெரிந்தது" என்றனர்.