சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நாளுக்கு நாள் வரும் புதிய தகவல்களால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, சாத்தான்குளம் சம்பவத்தில் ஊர்க்காவல் படைக்கு (ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்) தொடர்பு உள்ளது என்று வந்துள்ள குற்றச்சாட்டையடுத்து அந்த அமைப்பை கலைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என தந்தையும், மகனும் காவல் துறையால் அடித்து துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று வரை அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. அங்கு விசாரணைக்கு சென்ற நீதிபதியே அச்சுறுத்தலுக்கு ஆளான செய்தி நம் ஜனநாயக அமைப்புக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகும்.
இச்சம்பவத்தின் பின்னணி குறித்து தினமும் வெளிவரும் தகவல்கள் புதிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனிடையே, சாத்தான்குளம் படுகொலை சம்பவத்தில் ஊர்க்காவல் படை என்ற அமைப்பினரும் ஈடுபட்டுள்ளதாக வரும் செய்திகள் புதிய கேள்விகளையும், அச்சங்களையும் எழுப்பியுள்ளது. அதில் குறிப்பிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு சேர்க்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்த சந்தேகங்களை போக்கும் கடமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது.
ஊர்க்காவல் படை என்ற அமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது ? யார், யாரை கொண்டு உருவாக்கப்படுகிறது ? அதன் நோக்கம் என்ன ? அதன் எல்லைகள் என்ன ? என்பது பற்றிய விவரங்கள் நாட்டு மக்களுக்கு தெரியவில்லை. சிலரின் தவறுகள் காரணமாக தற்போது தமிழ்நாடு காவல் துறையின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி உருவாகியிருக்கும் நிலையில், மனித உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை பரவலாக காணப்படுகிறது.
இச்சூழ்நிலையில் காவல் துறையின் மாண்புகளை குலைக்கும் காவலர்கள், சட்டத்தின் வழியில் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் வலிமைப்பட்டிருக்கிறது. தற்போது பரபரப்பாக குற்றஞ்சாட்டப்படும் ஊர்க்காவல் படை அமைப்பு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பது மிகுந்த கவலையை தருகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு தெளிவான விளக்கத்தை அளிப்பதோடு, அந்த அமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.