திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு, பி.எஸ்.பி. நகரைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவர், பல்லடம் ரோட்டில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஜூன் 27ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தோட்டத்து வீட்டுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பிபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று (ஜூலை 10) தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே வந்த ஜெகன், ராஜ்குமார் ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றபோது அரவிந்த் குமார் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர், இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 20 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.