தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்துவருகிறது.
இதன் காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துவந்தது. இதனைதொடர்ந்து வடகரை அருகேயுள்ள 132 அடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணை கடந்த சில நாள்களுக்கு முன்னர் இரண்டாவது முறையாக முழுக் கொள்ளளவையும் எட்டி நிரம்பி வழிகிறது.
அணைக்கு விநாடிக்கு 86 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று கடையநல்லூர் அருகேயுள்ள 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி, 84 அடி கொண்ட ராம நதி அணை, 36 அடி கொண்ட குண்டாறு ஆகிய அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
மேலும் நீர்வரத்து அதிகரித்துவருவதன் காரணமாக அணைக்கு வரக்கூடிய தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
"அனைத்து நீர்த்தேக்கங்களும் வெகுவாக நிரம்பிவருவதால் பொதுமக்கள் யாரும் அணைகளிலோ, அணைகளின் மறுகால் பகுதிகளிலோ குளிக்க வேண்டாம்.
மேலும் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு உள்ளதால் பொதுமக்கள் ஆறுகள், குளங்கள், தனியார் அருவிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம். மீறினால் காவல் துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் எச்சரித்துள்ளார்.