கோயம்பேடு சந்தை திருமழிசையில் தற்காலிகமாக செயல்பட்டுவருகிறது. இங்கு 200 கடைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மொத்த வியாபாரிகள் தினந்தோறும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர்.
தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக காய்கறிகளை வாங்க வரும் வாகனங்களை 50-50 வாகனங்களாக உள்ளே அனுப்பிவருகின்றனர். இதனால் முதல் நாள் மாலை 6 மணிக்கு வரும் வாகனங்கள் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு காய்கறிகளை வாங்கிக் கொண்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதாகவும் வியாபாரமும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி வியாபாரிகள் திருமழிசை சந்தையில் திடீரென வாகனங்களை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சந்தையை கோயம்பேட்டிற்கே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.