இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், தமிழ்நாடு முழுவதும் 38,600 கோயில்கள் உள்ளன. இதில் 331 கோயில்களில் இருந்து வருடத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான வருமானமும், 34,099 கோயில்களில் 10 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கிடைக்கிறது. கோயில் நிலங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை திருவிழாக்கள், பராமரிப்பு, குளம் தூர்வாருதல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என விதிகள் உள்ளன. அதை கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு சென்றாய பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உதவியுடன் அலமேலு என்பவர் அபகரிப்பு செய்துள்ளார்.
கோவில் நிலத்தை மீட்டு, அபகரிப்புக்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, கடந்த 2014, 2018 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
அதனால், நிலத்தை மீட்க இந்த சமய அறநிலையத்துறை சிறப்புக் குழுவை அமைத்து கோயில் சொத்துக்களை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். ஆக்கிரமிப்பால் 2011 முதல் ஏற்பட்ட வருவாய் இழப்புகளை அலுவலர்களிடம் இருந்து வசூலிக்கவும், நில ஆக்கிரமிப்புக்கு துணை புரிந்த அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நான்கு வாரத்தில் தமிழ்நாடு அரசு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.