திருநெல்வேலி மாவட்டத்தின் நகர் பகுதிகளில் கரோனோ தொற்று அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மாவட்டம் முழுவதும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நகர் பகுதியில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
நகர்ப்பகுதியில் தொற்றை கட்டுப்படுத்த திருநெல்வேலி மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஜூலை 1) முதல் டீக்கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே டீக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் இன்று (ஜூன் 30) வெளியிட்ட செய்திக் குறிப்பில், "திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்ட போது பல பகுதிகளில் டீக்கடைகளில் பொதுமக்கள் அவசியமின்றி அதிகளவில் கூடுவது கண்டறியப்பட்டது. பொதுமக்களின் இத்தகைய செயலால் கரோனா பரவலாகக் கூடும் என்பதால் இனி வரும் காலங்களில் நோயை கட்டுப்படுத்தும் வண்ணம் திருநெல்வேலி மாநகராட்சியில் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே டீக்கடைகள் செயல்பட அனுமதித்து ஆணையிடப்படுகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்படும் நடைமுறைகளுக்கு பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.
இந்த அறிவிப்பை கேட்டு நெல்லை மாநகர டீ கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மூன்று மணி நேரம் என்பது மிகவும் குறைவான நேரம். அந்த நேரம் கடையை எடுத்து வைப்பதற்கே சரியாக போய்விடும் என்று டீக்கடை வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் அருகில் டீக்கடை நடத்திவரும் அமுதா கூறுகையில், "நாங்கள் டீக்கடை நடத்தி வருகிறோம். எங்களுக்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை கடையைத் திறக்கச் சொன்னால் எப்படி கடை நடத்துவது ? அந்த நேரம் கடையை எடுத்து வைப்பதற்கே சரியாக இருக்கும். இதற்கு பேசாமல் கடையை முழுவதும் மூட சொன்னால் கூட நாங்கள் மூடிவிடுவோம். குறைந்தபட்சம் 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையாவது கடையை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஓய்வுபெற்ற டிஎஸ்பி காரில் மதுக் கடத்தல்: சினிமா தயாரிப்பாளர் கைது!