ஆந்திரா அரசு திறந்துவைத்த கரோனா சிறப்பு மையங்களில் சரியான வசதிகள் இல்லை என்று தெலுங்கு தேச கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் நேற்று முன்தினம் (ஜூலை 24) போராட்டத்தில் ஈடுபட்டனர். விதிமுறைகளை பின்பற்றி போராடியவர்கள், அதே சமயம் ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசாங்கத்தின் அலட்சியமான அணுகுமுறையை கைவிடக் கோரி பதாகைகளை கையில் வைத்து மக்களுக்கு உதவுமாறு வலியுறுத்தினர்.
இந்நிலையில், 175 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 25 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அவரவர் குடியிருப்புகளில் இருந்து தெலுங்கு தேச கட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது;
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் நிவாரண உதவி வழங்குவது போல ஏழை குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும். இந்த சமயத்தில் அடித்தட்டு மக்கள் அனைவரும் மிகுந்த துன்பத்தில் வாழ்ந்துவருகின்றனர். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர் போன்றோருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் களத்தில் பணியாற்றும் ஊடகத்துறையில் இருக்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
சிறப்பு முகாம்களில் ஏற்பட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு முறையான ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட வேண்டும். நோயாளிகளுக்கு முறையாக உணவுகள் வழங்க வேண்டும். குடிநீர், சுகாதார தரத்தை மேம்படுத்த வேண்டும். நோயாளிகள் குணமடைந்து சென்ற பிறகு அவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
பொது இடங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் மதுபானக் கடைகளை மூட வேண்டும். இதற்கிடையில் கரோனா சிகிச்சை மாநில அரசின் முன்னுரிமை பட்டியலில் இல்லை என்று தெலுங்கு தேச கட்சியின் ஆந்திர தலைவர் கே. கலா வெங்கட்ராவ் குற்றஞ்சாட்டினார். இதுவரை, மாநிலத்தில் மொத்த கரோனா வைரஸ் வழக்குகள் 64,713ஐ எட்டியுள்ளன. 823 பேர் தொற்று நோயால் உயிரிழந்தனர் என்று தெரிவித்தனர்.