கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி உபரி உணவுப் பொருள்களின் உணவூட்டுச்செலவினத் தொகையை மாணவர்களின் பெற்றோர் வங்கிக் கணக்கில் செலுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக சமூகநல ஆணையர் எழுதிய கடிதத்தில், "கரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதையடுத்து மாணவ மாணவியர்களுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி சமைத்த உலர் உணவுப் பொருள்கள் அல்லது உணவு பாதுகாப்புப்படி வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்ட மே கோடை விடுமுறை நாட்களுக்கு உலர் உணவு வழங்குவது தொடர்பான நடவடிக்கை அரசின் பரிசீலனையில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சத்துணவு பயனாளிகளுக்கு உணவு பாதுகாப்புப் படியாக வழங்கிட சாத்தியக் கூறுகளை ஆராய தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயன்பெறும் சத்துணவு பயனாளிகள், பெற்றோரின் வங்கிக் கணக்கு விவரங்கள் தெரிவிக்கும்படியும், இல்லையெனில் விவரங்களை பெற ஆவண செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் சத்துணவு மையங்களில் பயன்பெற்று வரும் மாணவ மாணவியர்களுக்கு உணவு பாதுகாப்புப் படி வழங்கிட சத்துணவு பயனாளிகள், பெற்றோரின் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று, சமூகநல ஆணையர், சென்னைக்கு அனுப்பி வைத்திடும் வகையில் தொகுப்பு அறிக்கையாக மாவட்ட ஆட்சியரகம் சத்துணவுப்பிரிவிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.