சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், செவிலியர் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
"தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், சுகாதாரத்துறை செயலாளர், இயக்குநர்கள் பேச்சுவார்த்தையின்போது உடன் இருந்தார்கள். இரு சங்கங்கள் சார்பில் தலைமை நிலையத்தில் இருக்கும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கோரிக்கைகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக பரிசீலித்து அதற்கான முடிவுகளையும் தீர்த்து வைத்தார். கோரிக்கைகள் மற்றும் ஏற்பட்ட சமூக முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- செவிலிய கண்காணிப்பாளர் பிரிசில்லா செவிலிய கண்காணிப்பாளரின் குடும்பத்திற்கு அரசு அறிவித்தபடி 50 லட்சம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் உரிய காப்பீடு, வாரிசு ஒருவருக்கு அரசு வேலை, பிற பயன்கள் அளிக்கப்பட வேண்டும். இது முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கான மருத்துவ கல்வி இயக்குநர் புரோபோசல் நகல் சங்க நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினர் 50 லட்சம் ரூபாய் பெறுவதற்கு மத்திய அரசுக்கு காப்பீடு அனுப்பி விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவரது வாரிசு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
- இனி வரும் காலங்களில் துரதிஷ்டவசமாக ஏதேனும் மருத்துவரோ அல்லது செவிலியரோ கோவிட் -19 வியாதியால் இறக்க நேரிட்டால் அவர்களுக்கு உரிய நிவாரணம், பண பயன்கள், வாரிசு வேலை மறுநாளே அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது குறித்து முதலமைச்சர் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு ஆலோசிக்கப்பட்ட பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டது.
- நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தெங்குமராட்டா ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவர் ஜெயமோகன் மற்றும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் குமுதா இவர்களது குடும்பத்திற்கும் மற்ற துறைகளுக்கு வழங்குவதைப் போல நிவாரண பலன்களையும் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தனியாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுச் சென்று பரிசீலிக்கப்படும் என கூறப்பட்டது.
- நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு தனி தளம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கு ஸ்ரீ சத்ய சாய் பல் மருத்துவக் கல்லூரி ஏற்பாடு செய்யப்படும். சிறு அறிகுறிகள் இருப்பவர்களுக்கு இஎஸ்ஐ அயனாவரம் ஏற்பாடு செய்யப்படும். தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தனி தளம் ஒதுக்கப்படும். இது போலவே அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒரு தனி தளம் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
- மருத்துவர்களும் செவிலியர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்த விவரங்கள் சங்கங்களுக்கு வழங்கப்படும். இதுகுறித்து சுற்றறிக்கை அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பப்படும்.
- கோவிட்-19 தொற்று ஏற்பட்ட அனைத்து மருத்துவர் செவிலியர்களுக்கும் அரசு அறிவித்த இரண்டு லட்சம் ரூபாய் வருங்காலத்திலும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
- ஏற்கனவே 31 மே மாதம் வரை தொற்று ஏற்பட்டவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் எக்ஸ் கிரேசியா வாக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த அரசாணை நீட்டிப்பு செய்ய சுகாதாரத்துறை பரிந்துரை செய்யும் என உறுதியளிக்கப்பட்டது.
அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால் ஏற்கனவே கூட்டமைப்பு நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்ட 5.6.2020 அன்று அனைத்து மருத்துவர்களும் நர்சுகளும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது" என அதில் கூறப்பட்டுள்ளது.