தமிழ்நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டுவருகிறார். அதன்படி முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு (Special Investment Promotion Task Force) அமைத்தல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்பொழுது, அக்யூரே நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் ஜோசுவா லெவின், பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் பிரான்ஸ் வேன் கௌட்டன், சீமென்ஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைவர் ஜெர்டு உராப்னர், சிரோனா டெண்டல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் டொனால்டு கேசி, காப்பியம்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் வில்லியம் லியு, ஜி ஈ ஹெல்த் கேர் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் கிரென் மர்ப்பி, உறர்கோ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மைக்கேல் டோவார் மற்றும் பாஸ்டன் சயன்டிபிக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் மைக்கேல் எப்.மகோனி ஆகிய எட்டு முன்னணி மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும், சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும், அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடமாற்ற முடிவெடுத்துள்ளன. அண்மையில் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.