மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தின் பூமி பூஜை மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில் நடைபெற்றது.
இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உலகப்போரில் பொருளாதாரத்தை மீட்டெப்பதிலும், வேளாண் உற்பத்தியிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேளாண் உற்பத்தியில் அதிக மகசூலை உற்பத்தி செய்து முதலிடத்தை அடைய முழு ஒத்துழைப்பை விவசாயிகள் வழங்கியுள்ளனர். அதனால்தான் விலைவாசி உயர்வும் கட்டுக்குள் இருக்கிறது. அரசு கூட கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காய்கறி தொகுப்புகளை நிவாரணமாக வழங்கி வருகிறது.
கரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.நமக்காக மாவட்ட ஆட்சியர் முதல் தூய்மைப் பணியாளர்கள்வரை மழை, வெயில் பாராமல் இரவு பகலாக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார்.