கரோனா தொற்று பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்கை கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக அமல்படுத்தியுள்ள நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்து, வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் உள்ளிட்டவை குறிப்பிட்ட நேரம் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் தொற்றின் வீரியம் குறையாமல் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது . இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கூறியதாவது,
"பொது மக்கள் கூடுவதைத் தடுத்திடவும், தொற்று பரவாமல் கட்டுப்படுத்தவும் சேலம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில், எந்த விதமான தளர்வுகளுமற்ற முழு ஊரடங்கு இந்த மாதத்தின் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் கடைகள், சந்தைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் முழுமையாக மூடப்படுகின்றன. மேலும், சேலம் மாநகராட்சி, நான்கு நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் என அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் சிறு கடைகள் முதல் இறைச்சிக் கடைகள் வரை, வாகனப் போக்குவரத்து என அனைத்தும் முழுமையாக மூடப்படும்.
இந்த முழு ஊரடங்கு நாட்களில் பொது மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம். தடையை மீறி காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளக் கூடாது.
இதற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள், கடை உரிமையாளர்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி கரோனா தொற்று பரவலைத் தடுத்திட உதவ வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று (ஜூலை ஐந்து) ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஐந்து ரோடு பகுதி, அஸ்தம்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, குகை என மாநகரின் அனைத்துப் பகுதிகளும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது.
முழு ஊரடங்கு உத்தரவை மீறி, இரு சக்கர வாகனங்கள் , கார்களில் வெளியே சுற்றும் நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து வாகனங்களை ஆங்காங்கே பறிமுதல் செய்து வருகின்றனர்.