கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட வடக்கிபாளையம், குல்லி செட்டிபாளையம் ஆகிய இரண்டு பகுதிகளில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் காய்கறி சந்தையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " கரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த நான்கு மாதமாக தமிழ்நாடு அரசுக்கு வர வேண்டிய விற்பனை வரி, ஜிஎஸ்டி வரி என ஒரு லட்சம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், தமிழ்நாடு மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கரோனா காலத்தில் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியும், குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருள்களும் வழங்கி வருகிறார்.
ஆனால், இந்தப் பணிகளை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டாமல் பிரச்னையை உருவாக்கிக் கொண்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது. உயிரைப் பணயம் வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கரோனா காலத்திலும் நேரடியாகச் சென்று களப்பணியில் ஈடுபட்டு வரும் நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நல்ல ஆலோசனை வழங்காமல் முதலமைச்சர் மீது அவதூறும், அவரது செயல்பாடுகள் குறித்து பொய் பரப்புரையும் செய்து, மூட்டைகளை அவிழ்த்துவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைப்பது கண்டிக்கத்தக்கது" என்று அவர் கூறினார்.