உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு வருகிறது. செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெறும் இப்போட்டியில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் தொடக்கமே இலங்கை அணிக்கு மோசமாக அமைந்தது. இந்தத் தொடரில் அந்த அணிக்காக 180 ரன்களை அடித்த கேப்டன் திமுத் கருணரத்னே முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களை, தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் பெரிய அளவிலான ரன்களை அடிக்க விடாமல், அவர்களது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குஷால் பெரேரா, அபிஷ்கா ஃபெர்னான்டோ ஆகியோர் தலா 30 ரன்களை அடித்தனர். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் டுவைன் ரெட்ரோசியஸ், மோரிஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய வாய்ப்பை இழந்த தென்னாப்பிரிக்க அணி இந்தப் போட்டியிலாவது ஆறுதல் வெற்றிபெறுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.