திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கலசப்பாக்கம் பகுதிக்குட்பட்ட கிராமத்தில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை நள்ளிரவில் முட்புதரில் வீசுவதற்கு பெற்றோர், உறவினர்கள் தயாராக இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில், சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினா தலைமையில், அலுவலர்கள் கலசப்பாக்கம் பகுதிக்குட்பட்ட கிராமத்திற்கு விரைந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் முட்புதர் அருகில் கையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையுடன் சிலர் நிற்பதை அறிந்து அவர்கள், அருகில் சென்று விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அவர்கள் கூறியதை அடுத்து கலசப்பாக்கம் காவல் துறையினரின் உதவியுடன் விசாரித்தனர்.
இதனையடுத்து அருண், மகேஸ்வரி தம்பதியினர், தங்களுக்குப் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை வேண்டாம் என்று முடிவெடுத்து முட்புதரில் வீசிவிட்டுச் செல்லலாம் என்று வந்ததாக கூறினர். பின்னர் அந்த தம்பதியினருக்கு சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினா உரிய அறிவுரைகளை வழங்கி, அவர்கள் செய்ய இருந்த தவறுகளை தடுத்து நிறுத்தினார்.
பின்னர் அருண், மகேஸ்வரி தம்பதியினர் மனம் மாறி, குடும்பத்தினரின் ஒப்புதலோடு குழந்தையை தமிழ்நாடு அரசின் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் வளர்க்க சம்மதம் தெரிவித்தனர். கடைசி நிமிடத்தில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினா, கலசப்பாக்கம் உதவி காவல் ஆய்வாளர்கள், அலுவலர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.