இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவான் வீரர், கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படுவர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம், அதிக ரன்கள் என பல்வேறு சாதனைகள் படைத்த அவர், 1992 முதல் 2011 வரை ஆறு உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடியுள்ளார்.
தன் வாழ்க்கையே கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்த அவருக்கு 2007இல் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர், அவருக்கு மறக்க வேண்டிய தொடராகவே அமைந்தது. ஏன், இந்திய அணிக்கும் அந்தத் தொடர் மறக்கக்கூடியத் தொடராகதான் இருந்தது.
முதல் சுற்றுலேயே இந்திய அணி நடையைக் கட்டியதுதான் முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல், சச்சின் அந்தத் தொடரில் 64 ரன்களை மட்டுமே அடித்தார். இந்திய அணியின் தோல்விக்கு சச்சின், அப்போதைய கேப்டன் டிராவிட்தான் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன
இதனால், இந்த தொடர் முடிந்த கையோடு தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறபோவதாக சச்சின் நினைத்தார். தற்போது இது குறித்து அவர் நினைவுக் கூறுகையில்,
"2007 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர்தான், நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என நினைத்தேன். அந்த தருணத்தில், இந்திய அணியில் ஆரோக்கியமான சூழல் நிலவவில்லை. இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் அடைய வேண்டும் என நினைத்தேன். அப்படி மாற்றம் ஏதும் வரவில்லை என்றால் நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என 90 விழுக்காடு முடிவு செய்தேன்.
ஆனால், என் சகோதரர் 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மும்பையில்தான் நடைபெறும்போது, அந்த அழகிய உலகக்கோப்பையை உன் கையில் தூக்கிப் பார்க்க வேண்டும் என சற்று கற்பனை செய்துபார் என்றார். பின், என் முடிவு குறித்து, என் ஆசான் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் விவ் ரிச்சர்ட்ஸிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டேன். அவர், நீ இன்னும் கிரிக்கெட் விளையாட வேண்டும். அதற்கான ஆற்றல் உன்னிடம் உள்ளது என்றார்.
நான் யாரை என் பேட்டிங் ஹிரோவா பார்த்தேனா அவரே என்னை ஊக்குவித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடம் நான் 45 நிமிடம் பேசினேன். அந்தத் தருணம்தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்தை முற்றிலும் மாற்றியது. அதன் பிறகு நான் சிறப்பாகவும் விளையாடினேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விவ் ரிச்சர்ட்ஸ் தந்த அறிவுரையால், தொடர்ந்து ஆடிய சச்சின் கிரிக்கெட்டில் செய்த மேஜிக் ரசிகர்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.