தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மா, தென்னை, வாழை, கிழங்கு உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த மலை அடிவாரத்தில் காட்டு யானைகள் நடமாட்டமும் உள்ளது.
அந்த யானைகள் கூட்டத்தில் இருந்து தனித்து விடப்பட்ட மக்னா எனும் ஒற்றைப் பெண் யானை, விளை நிலங்களை சேதப்படுத்தி, விவசாயிகளையும் தாக்கியுள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில் காட்டு யானையின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
தற்போது இந்த ஒற்றை காட்டு யானையின் தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படும் என விவசாயிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த யானையின் தாக்குதலால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் முதற்கட்டமாக தேவாரம் மலைப்பகுதியில் உள்ள தோட்டங்களில் இரவு நேரங்களில் விவசாயிகள், காவலாளிகள் தங்குவதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
மேலும் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரையில் யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் ஆட்கள் யாரும் நடமாட வேண்டாம் எனவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பை தோட்டபகுதிகளுக்கே நேரடியாக சென்று விவசாயிகளுக்கு வனத்துறை கூறி வருகின்றனர்.