இந்திய சினிமா உலகில் புகழ்பெற்ற ஜாம்பவான் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பி செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். எஸ்பிபியின் மறைவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு தரப்பினர் எஸ்.பி.பியின் பாடல்களை பாடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக பாடகர் உன்னி மேனன் எஸ்.பி.பிக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக பாடல் ஒன்றை இசையமைத்து பாடியுள்ளார், "பாடும் நிலாவிற்கு பாடகன் சங்கதி" என்ற அந்த பாடலில் எஸ்.பி.பியின் பெருமைகளை விளக்கும் வரிகள் இடம்பெற்றுள்ளன. கே.வி. ஶ்ரீதரன் எழுதியுள்ள இந்த பாடலில்,
"பாடும் நிலாவே இசை பயணங்கள் முடிவதில்லை'
"பாடி பறந்த கிளி உனக்கு வானம் தூரமில்லை"
எனத்தொடங்கும் வரிகளில் இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது.
மேலும் காணொலியில் எஸ்.பி.பியுடன் தான் இருந்த அழகிய தருணங்களையும் உன்னி மேனன் பதிவு செய்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.