கரோனா தொற்று தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 171ஆக உள்ளது.
இவர்களில் 156 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை, திருச்சியில் தலா ஒருவரும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 13 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில், கரோனா வைரஸ் தொற்றால் சித்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், செந்தில்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த அவரது மனைவி, மகள் ஆகியோர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா வைரசால் பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.