தமிழ்நாட்டில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 37 ஆயிரத்து 957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இதையடுத்து, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற அவருக்கு, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி சான்றிதழை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி பேசியதாவது,
"இந்தத் தேர்தலில் நான் வைப்புத்தொகை பெற்றால் அரசியலைவிட்டே விலகுவேன் எனக் கூறிய விஜயபாஸ்கர், தற்போது அரசியலை விட்டு விலகத் தயாரா என்பதை பத்திரிகையாளர்கள் நீங்கள்தான் கேட்க வேண்டும். அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்கு விசுவாசத்துடன் நான் நடந்து கொள்வேன்" எனக் கூறினார்.
கரூர் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு அதிமுகவின் 47ஆவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இனிவரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் சரி, அதில் செந்தில் பாலாஜி வைப்புத்தொகை வாங்கிவிட்டால், நான் அரசியலில் இருந்து விலகிவிடுவேன் எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.