தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் 15 விழுக்காடும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 விழுக்காடு இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கப்படுகிறது.
இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, திமுக, அதிமுக, பாமக, மதிமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது. அதன்படி திக, திமுக, அதிமுக, மதிமுக, பாமக ஆகிய அரசியல் கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், மருத்துவ மேற்படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருவதால் இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிட்டார். இதேபோல், பாமக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் பாலு முறையிட்டார்.
இந்த முறையீடுகளை கேட்ட நீதிபதிகள், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரிய வழக்குகளை நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர்.