ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் - சாந்தி தம்பதியின் மகள்கள் ரித்திகா, தனுஸ்ரீ. இவர் சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரன் இறந்துவிட்டார். இதனால், சாந்தி கூலி வேலைக்குச் சென்று தனது மகள்கள் இருவரையும் காப்பாற்றிவருகிறார்.
தந்தையை இழந்த ரித்திகா சிலம்பாட்டத்தில் ஆர்வமாக இருந்ததையறிந்த பள்ளி ஆசிரியர்கள் அவருக்குச் சிறப்புப் பயிற்சியளித்து வந்தனர். இந்நிலையில், சிலம்பாட்டத்தில் நன்கு தேர்ந்த ரித்திகா கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். தற்போது கரூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் ரித்திகா பங்கேற்கிறார்.
தந்தையை இழந்து கூலித்தொழிலாளியான தாயின் அரவணைப்பில் வளர்ந்துவரும் ரித்திகா மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியிருப்பது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து மாணவி ரித்திகா கூறுகையில், "மாநில அளவில் நடக்கும் சிலம்பாட்ட போட்டியில் வெற்றிபெற்று, தேசிய அளவிலும் சாதித்து சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் ஈரோடு மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பல ஆண்டுகளாக திறக்கப்படாத சுகாதார வளாகம் - பொதுமக்கள் சிரமம்
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவ, மாணவியரும் தற்போது விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்து வருவதை அறிந்த பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஊக்கமளித்துவருகின்றனர்.