கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடியை அடுத்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை - மகன் இருவரும் ஒரே இரவில் (ஜூன் 22ஆம் தேதி) சந்தேகத்திற்கிடமான வகையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இன்று நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு சார்பாக முன்னிலையான வழக்குரைஞர், இறந்த இருவரது உடல்கூறாய்வு பரிசோதனையின் அறிக்கைகள் தயாராக இருக்கின்றன. தற்போது, அவற்றை சீலிடப்பட்ட உறையில் தாக்கல்செய்ய முடியவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டால், அதனை எப்பொழுது வேண்டுமானாலும் தாக்கல்செய்கிறோம்.
தமிழ்நாடு காவல் துறைத் தலைவர், தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, காவல் துறையினருக்கான வழிமுறைகள் விரைவில் பிறப்பிக்க உள்ளது" எனத் தெரிவித்தார்.
விசாரணையின்போது தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் காணொலி வாயிலாக முன்னிலையானார். இந்த வழக்குத் தொடர்பாக காவல் துறையின் இடைக்கால அறிக்கையை தாக்கல்செய்தார்.
வாதங்களை கவனித்த நீதிபதிகள், "தற்போது காவல் துறையினர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். அவர்களுக்குப் போதிய மனநல ஆலோசனை வழங்க காவல் துறைத் தலைவர் பரிசீலனை செய்ய வேண்டும்.
கோவில்பட்டி சிறையில் ராஜா சிங் என்ற மற்றொரு கைதி சிறை அலுவலர்களால் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை செய்து முழுமையான அறிக்கையும் தாக்கல்செய்ய வேண்டும்.
நீதிமன்ற விசாரணைகளை குறைவாக யாரும் எடைபோட வேண்டாம். நடுவண் நீதிமன்ற நீதிபதி விசாரணையை முழுமையாக நடத்த அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் சிசிடிவி காட்சியையும் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். அவற்றை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.