சேலம், கோரிமேட்டில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில், வினித்ராஜ் என்பவர் பி.பார்ம் படித்து வருகிறார். இவர், கல்லூரி அருகேயுள்ள காமராஜர் நகரில், வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 25ஆம் தேதி கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் தனது இருசக்கர வாகனத்தை வாடகை வீட்டில் நிறுத்தி விட்டு, சொந்த ஊரான தருமபுரிக்கு சென்றார். பின்னர், ஜூன் 12ஆம் தேதி மீண்டும் சேலம் வந்தார். அப்போது, காமராஜர் நகரில் உள்ள வீட்டில் இருந்த, தனது இருசக்கர வாகனம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அழகாபுரம், மின்சார வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த சரண், அவரின் நண்பரான சட்டக்கல்லூரி மாணவர் சுகுமார் ஆகியோர் திருடியது தெரியவந்ததை அடுத்து அவர்களை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இருவரும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும், இதுவரை 7 இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் அளித்த வாக்குமூலத்தையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: திருட எதுவுமில்லை' - மீன் குழம்பை சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடியில் மட்டையான திருடன்!