என்எல்சி இந்தியா நிறுவனத்தில், ஒப்பந்த நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, இதர சலுகைகள் வழங்குவது தொடர்பாக மத்திய தொழிலாளர் நல அமைச்சக அலுவலர்கள் மற்றும் என்எல்சி இந்தியா நிறுவன அலுவலர்கள் முன்னிலையில் நெய்வேலியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிலையை பொருத்து மாதம்தோறும் 3500 முதல் 4000 வரை ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. அத்துடன் வீட்டு வாடகைப்படி, உணவு படி, சலவை படி போன்ற இதர சலுகைகளும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இரண்டு சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இதனால் சுமார் 14 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். மேலும் அவர்களது ஊதிய பலன் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.
இந்த ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் 2026ஆம் ஆண்டு டிசம்பர் வரை அமலில் இருக்கும். இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஆன சிஐடியு, தொமுச ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி செயல்படும். ஒப்பந்த தொழிலாளர்கள் சார்ந்த தொழிற்சங்கங்கள் ஒப்பந்ததாரர்களுக்கு தொழிற்சங்கங்கள் இருதரப்பு குழு நடத்திய பேச்சுவார்த்தை மூலம் உடன்படிக்கை நிறைவேறியுள்ளது.
இந்த ஒப்பந்தமானது நிறுவன வரலாற்றில் முதல்முறையாக எவ்வித போராட்டம் இன்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.