நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு சாலைப்பணி நடைபெற்றபோது, ஏற்கனவே இருந்த சாலையை பெயர்த்து எடுக்காமல், பழைய சாலை மீதே மீண்டும் புதிய சாலை அமைக்கப்பட்டது.
இதை எதிர்த்து, மயிலாடுதுறை வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கில் தமிழ்நாடு முழுவதும் புதிய சாலை அமைக்கும் பணியின்போது, பழைய தார் சாலைகளை பெயர்த்து எடுத்துவிட்டு உயரத்தை அதிகரிக்காமல் புதிய சாலையை அமைக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் சின்னகடைத் தெரு முதல் பால்பண்ணை வரை 2.40 கி.மீ தொலைவுக்கு ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல் நடைபெறும் புதிய சாலை அமைக்கும் பணியைக் கண்டித்து மனுதாரர் செந்தில்வேல், தூய்மை இந்தியா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோடி.கண்ணன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக சாலை அமைக்கப்படுவதாகக் கூறி பணியைத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த மயிலாடுதுறை காவல்துறையின், ஒருபக்கம் மட்டும் முடிக்கப்படாமல் இருக்கும் சாலைப்பணியை மட்டும் முடித்துக் கொள்ளவும், எஞ்சிய பணிகளை பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொடரவும் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து ஒருபக்கம் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.