தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 800ஐ தாண்டியுள்ளது.
இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுத்து அவர்களை தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விருதாச்சலம் வட்டாட்சியர் கவியரசு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் இழப்பு வருவாய்த்துறையினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வட்டாட்சியரின் இறப்புக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்திரசேகர் சகா முரி தலைமையில் இன்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இறந்த வட்டாட்சியரின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.