சென்னையை சேர்ந்த சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவித்து தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் சில சலுகைகளை அறிவித்துள்ளது
இந்நிலையில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி வீட்டு வாடகையை கட்டாயப்படுத்தி வசூலிக்க கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் சுயதொழில், கூலி வேலைக்கு செல்பவர்கள் வேலை இழந்து உள்ளதால் வீட்டு வாடகை வாங்க கூடாது என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. இருப்பினும் வீட்டு உரிமையாளர்கள் கட்டாயமாக வாடகை வசூலிக்கின்றனர்.
டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு முடியும்வரையும், மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களுக்கும் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
அதே போல், சிங்கப்பூரில் ஆறு மாதத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஆனால், வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என்ற மத்திய மாநில அரசின் அறிவிப்புகள் வெறும் காகித அளவிலேயே இருக்கிறது.
இதனால், மேலும் மூன்று மாதங்களுக்கு வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க கூடாது எனறு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.