தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளோடு தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது. அதற்கிணங்க புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி, விடுதிகள் திறக்கப்பட்டன.
மாணவர்கள் அனைவரும் RT-PCR பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என்ற சான்றுடன் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியுடன் கல்லூரிக்கு வந்திருந்தனர்.
கல்லூரி முதல்வர் மு.பூவதி வழிகாட்டுதல் படி கல்லூரி, விடுதிகளில் கரோனா நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
மருத்துவ மாணவர்கள் சிறுசிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு வகுப்புகள் எடுப்பதற்கு ஏதுவாக சிறப்புப்பாடத்திட்டமும் வகுக்கப்பட்டது.
மாணவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு, அவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய நலக்கல்வி வகுப்புகள் தொடங்கின.