புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்கள் முகக்கவசங்களை அணிந்திருந்தாலும், தகுந்த இடைவெளி பின்பற்றுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
கரோனா பரவலைத் தடுக்க சட்டரீதியாக அழுத்தம் தரவேண்டும். ’ஆரோக்ய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்து அனைவரும் பயன்படுத்த வேண்டும். ஆரோக்ய சேது செயலியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும். மக்கள் ஒன்றாகக் கூடுவதை கட்டுப்படுத்தும் பணிகளையும், போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணிகளையும் இன்னும் அதிகளவு கவனத்துடன் செய்ய வேண்டும்.
தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களின் மீதான வழக்கு விசாரணையில் எந்தத் தளர்வும் அளிக்கக்கூடாது. நீங்கள் வழக்கு தொடுப்பதன் மூலமாகத்தான் சட்டத்தின் மீதான மரியாதை இருக்கும். அதுமட்டுமின்றி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். இதனால் நமது சுகாதார அமைப்பு, மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களின் அழுத்தம் குறையும். தயவுசெய்து நோய்ப் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியை பின்பற்றுவது, தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் மீதான வழக்குகள், ஆரோக்ய சேது செயலி போன்ற அனைத்தும் நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளாகும். இதைப் பின்பற்றவில்லை எனில் நமது குடும்பத்தினர்கள், நண்பர்கள் என யாரேனும் ஒருவரை நாம் பிரியக்கூடிய இக்கட்டான நிலை ஏற்படும்.
தமிழ்நாடு இன்னும் ஏன் பொதுமுடக்கத்தில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். நாம் அண்டை மாநிலங்களைப் போல் அதிக மக்கள் தொகையைப் பெற்றிருக்கவில்லை. எனவே, நோய்த் தடுப்புக்கு நம் மக்களை தயார் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் மேலும் 31 பேருக்கு கரோனா உறுதி