கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெறப்பட்ட நிவாரண நிதி தொடர்பாக விளக்கம் கேட்டு வழக்குரைஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய, நிவாரண நிதியத்தை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு? பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு? என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி இணையதளத்தில், பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரபாகர், " மற்ற மாநிலங்களில் வெளிப்படையாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் வெளிப்படுத்தப்படவில்லை" என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எவ்வளவு நிதி பெறப்பட்டது என்பது குறித்து இணையதளத்தில் வெளியிடுவதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது? என கேள்வி எழுப்பி நாளை (ஜூலை 16) அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.