கரோனா தொற்று பரவலைத் தடுக்கும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்ற மார்ச் மாதம் முதல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டமும் ரத்துசெய்யப்பட்டது.
தற்போது அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் வாரந்தோறும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மெகராஜ் சென்ற வாரம் அறிவித்திருந்தார். இதன்கீழ் இன்று செப்டம்பர் 14 நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இதில் நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கோட்டை குமார் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். அம்மனுக்கள் மீது விசாரணை நடத்தி பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்கவந்த பொதுமக்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. வட்டாட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறுவது குறித்த செய்தி சரிவர தெரிய வராததால் குறைந்தளவே பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.