திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருக்கொட்டாரம் ஊராட்சியில் உள்ள மேலத்தெரு, கீழத்தெரு என ஒவ்வொரு தெருவிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்காக இரண்டு நீர்த்தேக்க தொட்டிகள் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தனித்தனியாக அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இந்த இரண்டு நீர்த்தேக்க தொட்டிகளை இந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பல வருடங்கள் ஆனதால் அதன் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டு ஒரு நாளைக்கு சுமார் 5,000 முதல் 10,000 லிட்டர்வரை குடிநீர் வீணாக சென்று குளத்திலும் வயல்வெளிகளிலும் கலப்பதால் அந்த கிராம மக்களுக்கு சரிவர தண்ணீர் செல்லவில்லை என கூறுகின்றனர்.
தற்போது கோடைக்காலம் என்பதால் தண்ணீருக்கு அலைமோதும் நிலைமை ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக இதுகுறித்து பலமுறை ஊராட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
இதனால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து புதிய குடிநீர் குழாய் அமைத்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.