ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த பொண்ணமங்கலம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் பிரதானத் தொழிலாக பனை மற்றும் ஈச்ச மரங்களிலிருந்து கள் இறக்குவது இருக்கிறது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் அறிவுறுத்தலின்பேரில், தொடர் கடுமையான நடவடிக்கையின் பேரிலும், அப்பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்யும் தொழில் சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு, அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் விவசாயம் உள்ளிட்ட மாற்று தொழில்களுக்கு மாற்றமடைந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அப்பகுதியில் மக்கள் கள் இறக்கி வியாபாரம் செய்து வந்த போது, காவல் துறையினர் மற்றும் அமலாக்கத்துறை மற்றும் தடுப்புப்பிரிவு காவல் துறையினருக்கு லஞ்சம் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று மீண்டும் கள் இறக்கி விற்பனையில் ஈடுபடுமாறும், அதற்கு இப்பொழுதே லஞ்சம் செலுத்தும்படியும் கூறியதாகத் தெரிகிறது.
அதற்கு அப்பகுதி மக்கள் தற்போது நாங்கள் அத்தொழிலில் ஈடுபடுவதில்லை என்றும்; தங்களால் லஞ்சம் தரமுடியாது என்றும் கூறியதால், மதுவிலக்கு அமலாக்கத் தடுப்புப்பிரிவு காவல் துறையினருக்கும், கள் வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு கைகலப்பாக மாறியது.
அதைத்தொடர்ந்து, தங்களின் வீடுகளில் காவல் துறையினர் புகுந்து சூறையாடியதாக அப்பகுதி பெண்கள் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கீதாவிடம் கேட்ட போது, 'அப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தீவிர நடவடிக்கை காரணமாக கள் இறக்கி விற்பனை செய்யும் தொழிலை நிறுத்தினோம். இந்நிலையில் மீண்டும் தற்போது அப்பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக, வந்த தகவலையடுத்து மது விலக்கு அமலாக்கத் தடுப்புப் பிரிவு காவல் துறையைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் கள் விற்பனை நடைபெற்று வந்ததாகவும், அதனை அமலாக்கப்பிரிவினர் செல்போனில் வீடியோ எடுத்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த காவலர் விநாயக மூர்த்தி ஆற்காடு அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய காவல் துறையினர் குவிக்கப்பட்டதால்; தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
காவலர் விநாயக மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டதாக பொன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமரவேல், மண்ணுமுருகன் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறோம்' என்றார்.