ஒரு ஆண்டிற்கும் மேலாக சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடியர்கள் மைக்கேல் ஸ்பேவர் மற்றும் மைக்கேல் கோவ்ரிக் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்று வான்கூவரை தளமாகக் கொண்ட 'ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் இந்தியா' அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் 'நாங்கள் இந்தியாவுடன் நிற்கிறோம்' மற்றும் 'சீனா ஜனநாயகத்திற்கு எதிரானது ' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிலர் 'திபெத் சீனாவின் பகுதியாக இல்லை' மற்றும் 'பஞ்சன் லாமாமை விடுவி' என எழுதப்பட்ட பதாகைகளுடன் திபெத்தின் கொடியை அசைத்துக்கொண்டிருந்தனர்.
முன்னாள் தூதர் கோவ்ரிக் மற்றும் தொழிலதிபர் ஸ்பேவர் ஆகியோர் 2018 டிசம்பரில் கைது செய்யப்பட்டதிலிருந்து சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஹவாய் நிர்வாகி மெங் வான்ஷோவை 2018 டிசம்பர் ஒன்றாம் தேதியன்று, கனடா அரசு கைது செய்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர நடவடிக்கைகள் மோசமாகின.
மெங் கைது செய்யப்பட்டதில் கோபமடைந்த சீனா, அவரை உடனடியாக விடுவிக்கக் கோரியது, ஆனால், அதற்கு கனடா இணங்கவில்லை. இந்த சம்பவத்திற்கு அடுத்த பத்து நாள்களில், கோவ்ரிக் மற்றும் ஸ்பேவர் ஆகியோர் சீனாவால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் மீது அதிகாரப்பூர்வமான எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில், கடந்த 18 மாதங்களாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.