திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் எட்டுவழிச் சாலைக்காக ஏற்கனவே நிலங்கள் கையகப்படுத்தி அதற்காக இரண்டு கட்டங்களாக அளவீடு செய்து நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. தற்போது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் எட்டுவழிச் சாலை வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நெடுஞ்சாலைத் துறை கோரியதையடுத்து மீண்டும் எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளளன.
செங்கம் அடுத்த மண்மலை, மேல்வணக்கம்பாடி, தொரப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தங்களது விளைநிலங்களில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பி, கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்திடவும், விவசாயிகளிடம் மீண்டும் நிலத்தை ஒப்படைத்திடவும், உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டை வாபஸ் பெறக்கோரி கோஷங்கள் எழுப்பி எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.