திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில்," நாங்கள் எங்களது பகுதியில் விவசாயம் செய்து வருகின்றோம். இந்நிலையில் என் குடும்பத்திற்கும் எங்களது உறவினர் குடும்பத்திற்கும் சொத்து பிரச்சினை ஏற்பட்டது. இதில் என் குடும்பத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க நான் சென்றிருந்தேன். என்னிடம் உரிய விசாரணை நடத்தாமல் புகாரை வாங்காமலும் அங்குள்ள காவல்துறையினர் என்னை அழைத்தனர்.
காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செல்வராஜ் என்பவர் எனது வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்து எனக்கு உதவி செய்வதாகவும், அதற்கு நீயும் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் இரட்டை அர்த்தத்தில் பேசினார்.
மேலும், தொடர்ந்து என்னை செல்போனில் தரக்குறைவாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசும் படியும் தொந்தரவு செய்து வருகிறார். ஆகவே, உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன் இது குறித்து, காவல்துறை தலைவர் மற்றும் திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.