உலகை அச்சுறுத்திவரும் கரோனா தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவருகிறது.
சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலூரில் நேற்று (ஜூன் 24) வரை கரோனா தொற்றால் 910 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜூன் 25) ஆறு பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 916 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரையும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 516 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கடலூர் மாவட்டத்தில் 529 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அலுவலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:இரட்டை அர்த்த டிக்டாக் காணொலியில் பொழுதைக் கழிக்கும் 'காவல் உதவி ஆய்வாளர்'