திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த அரிச்சபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் நீடாமங்கலம் அருகேவுள்ள கற்கோவில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தற்போது கண்ணன் மன்னார்குடியில் வாடகை வீட்டில் குடியேறி சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதற்காக வங்கியில் வீட்டுக் கடன் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், மன்னார்குடி கடை வீதியில் இயங்கும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வங்கிக் கடன் பெறுவதற்காக இன்று கண்ணன் வங்கிக்குச் சென்றுள்ளார்.
4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியிலிருந்து ரொக்கமாக எடுத்துக்கொண்ட கண்ணன் பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் உள்ள டேங்க் கவரில் வைத்துள்ளார்.
அப்போது, கண்ணனை நோக்கி வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கீழே ஒரு நூறு ரூபாய் நோட்டு கிடக்கிறது. அது உங்களுடையது என்றால் அதனை எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி கண்ணனின் கவனத்தை திசைதிருப்பி, இருசக்கர வாகனத்திலிருந்த பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
பின்னர், பணம் திருடு போனதையறிந்த கண்ணன் உடனடியாக மன்னார்குடி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், வங்கி அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, இருசக்கர வாகனத்திலிருந்த பணத்தை திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.