கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் லாரி ஓட்டுநர். குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்துவருகிறார் இவருக்கும் இவரது சகோதரர் ஆறுமுகத்திற்கு சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவேல், அவரது மூத்த மகன் பிரவீன் குமார் ஆகியோர் மதுபோதையில் எலச்சிபாளையம் பகுதியில் உள்ள ஆறுமுகத்தின் வீட்டுக்குச் சென்று சொத்து குறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அதில், ஆறுமுகத்தின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை அவர்கள் உடைத்தனர். இதனால் அங்கிருந்த பெண்கள் பயத்தில் கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து, பன்னீர்செல்வம் என்ற காவலர் சம்பவ இடத்துக்கு சென்று சக்திவேல், பிரவீன்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, அவரை ஆபாசமாக பேசிய இருவரும் திடீரென காவலர் பன்னீர்செல்வத்தை தாக்கியுள்ளனர். இதையடுத்து, பன்னீர்செல்வம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சக காவலர்கள் விரைந்து வந்து சக்திவேல், பிரவீன் குமாரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சோமனூரில் உள்ள அரசு மருத்துவமனையில் குடி போதைக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, அரசு ஊழியர் மீது தாக்குதல் உள்ளிட்ட 11 பிரிவுகளில் 2 வழக்குகளாக பதிவு செய்து நேற்றூ காலை நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் அவிநாசி கிளை சிறையில் அடைத்தனர்.