புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசப்பெருமாள். இவர் காரைக்கால் சர்ச் வீதியில் மதுபானம் மொத்த விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் மதுபான விற்பனையில் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு வெங்கடேச பெருமாளுக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்துள்ளது. இதனால் தனக்கு ஆதரவாக நாகராஜ் காரைக்காலை சேர்ந்த பெண் தாதா எழிலரசியை நாடியுள்ளார்.
அதனையடுத்து எழிலரசி கூட்டாளிகளான திரிலோக சந்திரன், பாலமுருகன் ஆகியோர் வெங்கடேச பெருமாளிடம், நாகராஜ் கேட்கும் பணத்தையும் உடனே கொடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளன.
இதனையடுத்து வெங்கடேசப்பெருமாள் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீர வல்லபனிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காரைக்கால் நகர காவல்துறையினர், மதுபான கடை உரிமையாளரை மிரட்டிய நாகராஜன், திரிலோக சந்திரன், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான பெண் தாதா எழிலரசியை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். எழிலரசி கடந்த சில வாரங்களுக்கு முன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.