தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 969 நேரடி உதவி ஆய்வாளருக்கான தேர்வை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வை எழுதியவர்களில் 5,275 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இவர்களுக்கு 2ஆம் கட்ட தேர்வான உடல் அளவீட்டு சோதனை, உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகிய தேர்வு நடத்த வேண்டியுள்ளது. ஆனால், சென்னையில் கரோனா காரணமாக தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உண்டாகியுள்ளதால், தேர்வை திருச்சியில் மாற்றி, காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த 2ஆம் கட்ட தேர்வை நடத்துவதற்காக, திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 7 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்து காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
2ஆம் கட்ட தேர்விற்கான தேதியை உடனடியாக விரைந்து வெளியிட வேண்டும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு, திருச்சி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் எந்த வித மோசடியும் நடைபெறாமல், இந்த தேர்வை கவனிக்க உத்தரவிட்டுள்ளார்
குறிப்பாக தேர்ச்சி பெற்றுள்ள 5,275 பேரும் கரோனா பரிசோதனை செய்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதிலும் 48 மணி நேரத்திற்குள் பரிசோதனை சான்றிதழை கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த தேர்விற்கு வரும் அனைவரும் கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.