தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம் கங்கணம் கிணறு கிராமத்தில் இரு தரப்பினரிடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில் ஊத்துமலை காவல் துறையினர் ஒரு தரப்பினருக்கு மட்டும் ஆதரவாகவும் மற்றொரு தரப்பினரான பட்டியலின மக்களுக்கு எதிராக பேசியதோடு, அச்சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளகோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் சமிரனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "ஊத்துமலை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் கல்யாணசுந்தரம் தங்கள் பகுதியில் உள்ள பெண்களிடம் ஆபாசமாக பேசிவருகிறார்.
காவல் நிலையத்திற்குள் செருப்பு அணிந்து வர தங்களுக்கு தகுதி இல்லை என தீண்டாமையை கடைபிடிக்கிறார்.
மேலும் இதுகுறித்து புகார் அளித்தாலும் காவல் நிலையத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துவருகின்றனர்.
எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.