கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அடுத்த பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, "நான் மாற்றுத்திறனாளி உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரவிளை என்னுமிடத்தில் எனது மூதாதையர்களால் முக்கால் சென்ட் இடம் கல்லறைக்கு ஒதுக்கப்பட்டது.
இதில் எனது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா ஆகியோரது உடல்கள் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டு, அதன் மேல் கல்லறைகள் கட்டப்பட்டு நான்கு பக்கமும் மதில் சுவர் கட்டி பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் எனது நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் போலி ஆவணங்கள் தயார் செய்து கடந்த 1ஆம் தேதி இரவு 12 மணியளவில், நான்கு கல்லறைகள் அமைந்துள்ள இடத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து அதனை தரைமட்டமாக்கினார். மேலும், கல்லறை இடர்பாடுகளையும் புதைக்கப்பட்ட உடல்களையும் டெம்போவில் ஏற்றி அங்கிருந்து அகற்றிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து நான் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஜெகன் அவர்களுக்கு உதவிய டெம்போ, ஜேசிபி ஓட்டுநர்கள், மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் ஆதிலிங்க போஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது நிலத்தை மீட்டு அங்கிருந்து தூக்கிச் சென்ற உடல்களை அதே இடத்தில் மீண்டும் அடக்கம் செய்ய உதவி செய்ய வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.